இந்திய ஒன்றிய அரசு, யூனியன் பிரதேசங்களை தனது ஆளுமைக்கு உட்படுத்தி,  தனது சட்டங்களையும், திட்டங்களையும், அமல் படுத்தும் சோதனை கூடங்களாக அவற்றை வைத்து இருப்பதோடு, மத்திய உள்துறை அதிகாரிகளின் வேட்டைக்காடாக மாறி, யூனியன் பிரதேசங்களில் வளங்கள் நவீன முறையில் சுரண்டப்படுவதோடு, தனது அடையாளத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், நிலத்தையும், வாழ்வாதாரத்தையும் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்திய ஒன்றிய அரசின் கீழ் உள்ள எட்டு யூனியன் பிரதேசங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே இந்திய ஒன்றிய அரசு விரும்புகிறது. இதற்கு முடிவு கட்ட இந்த எட்டு யூனியன் பிரதேசங்களும், ஒன்று பட்டு போராட முன் வரவேண்டும். இந்திய ஒன்றிய அரசின் பழி வாங்கும் போக்கு என்பது, புதுச்சேரி அரசு மீது தொடர்கிறது.

புதுச்சேரி, எப்போதோ மாநில தகுதி பெற்றிருக்க வேண்டிய மாநிலம். ஆனால் நமக்கு அளிக்காமல், வேண்டும் என்றே காலதாமதாமும், அலட்சியமும்  காட்டுகிறது மத்திய ஒன்றிய அரசு. மத்திய ஒன்றிய அரசு, நமது புதுச்சேரியை எப்படி வஞ்சித்தது? என்பது மிகப்பெரிய வரலாறு.

இது நமது மாநிலத்தின் வரலாற்றை, மிகவும் கவனமாக படித்து, இதில் நமது பணி என்ன என்பதை முடிவு செய்ய வேண்டும். அவசியம் இந்த பதிவை அனைவருக்கும் பகிர வேண்டும்.

முதலில் 1954 ல் இருந்து ஆரம்பிப்போம்.

1947 ல் இருந்து 1954 வரை கடுமையான பிரெஞ்சு இந்திய விடுதலைப் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் எண்ணற்ற உயிர்களை இழந்து, துப்பாக்கி முனை எதிர்கொண்டு, தலைமறைவு வாழ்க்கை ஆகியவற்றில் உருவானது தான், புதுச்சேரி மாநிலம்.

சிறப்பு நிர்வாக அந்தஸ்துடன், 100 சதவீத நிர்வாக மானியத்துடன், 32 ஒப்பந்த ஷரத்து க்கள் அடங்கிய உடன்பாட்டு ஒப்பந்தத்துடன், இந்திய ஒன்றிய அரசு நமது புதுச்சேரி மாநிலத்தை  இணைத்தது.

1962 ஆம் ஆண்டு, யூனியன் பிரதேசங்கள் மத்திய ஒன்றிய அரசின் ஆளுமையின் கீழ் கொண்டு வர, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 14 வது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன் விளைவாக, இந்திய ஒன்றிய அரசில், கோவா, மணிப்பூர், திரிபுரா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, டையு, மற்றும் டாமன் ஆகியவை, யூனியன் பிரதேசங்கள் வரிசையில் கொண்டு வரப்பட்டன.

14 வது சட்டத்திருத்தம் என்பது, இரண்டு சட்டங்களை திருத்தியும், ஒரு சட்டத்தில் புதியதாக உட்பிரிவை சேர்த்தும், கொண்டு வரப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டம், 239 ல் உட்பிரிவில் A வை சேர்த்து, 239 A என்று உருவானது. இதில்,  கோவா, மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம், திரிபுரா, புதுச்சேரி, டையு, மற்றும் டாமன், ஆகியவை யூனியன் பிரதேசங்கள் ஆயின.

இவைகள் ஏழும் , சட்டமன்றத்துடன் கூடிய அமைச்சரவை ஆளுமை உள்ளவை. இதில் இரண்டு சட்டங்கள் திருத்தப்பட்டன. அதில் ஒன்று 81(2) என்று சட்டம் திருத்தம் செய்ய பட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் குறைந்தது 20 சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்ததை   25 ஆக உயர்த்தப்பட்டது.

இரண்டாவது சட்டத்திருத்தம், 240 (1) ஆகும். இதில், யூனியன் பிரதேசங்களில்,  சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்கள், நேரடியாக குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டில் வரும் எனவும்.  சட்டமன்றம் கூடிய யூனியன் பிரதேசங்கள் குடியரசுத் தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் வராது, எனவும்  திருத்தம் செய்யப்பட்டது.

இந்த இரண்டு சட்டத் திருத்தங்களையும், ஒரு சட்ட உட்பிரிவையும் கொண்டு  உருவாகியதே இந்த பதினான்காவது சட்டத்திருத்தம். இந்த சட்டத்திருத்தமானது, ராஜ்யசபாவிலும், மக்களவையிலும், நிறைவேறி 1962 ஆகஸ்ட் 16 அன்று நடைமுறைக்கு வந்தது. அதைத் தான் நாம் யூனியன் பிரதேச சுதந்திர நாளாக கொண்டாடி வருகிறோம்.

இந்த, 239 ஏ சட்டமானது,  யூனியன் பிரதேசங்கள் தனக்காக சட்டமன்றம் அமைத்துக் கொள்ளவும், அமைச்சரவை குழு அமைத்து கொள்ளவும் வகை செய்கிறது.

இவ்வாறு இந்த சட்டத்தில் உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களான
கோவா, மணிப்பூர், திரிபுரா, இமாச்சலப் பிரதேசம் ஆகியன, மாநில அந்தஸ்து பெற்று விட்டன. இதில் விடுபட்டு போனது புதுச்சேரி மாநிலமும், டையூ, டாமனும் மட்டுமே.

இதில் டையு டாமனுக்கு இன்னும் சட்டமன்றம் அமைக்கவில்லை. காரணம், சட்ட மன்ற உறுப்பினர்கள் குறைந்த பட்சம் 25 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அது இல்லை என்பதால், அங்கு இன்னும் சட்டமன்றம் அமைக்கவில்லை.

கோவாவும், புதுச்சேரி மாநிலமும், பிரெஞ்சு காலணி ஆதிக்க கட்டுப்பாட்டில் இருந்தவை. கோவாவை மகாராஷ்டிரா மாநிலத்தோடு இணைக்க முயற்சி நடந்த போது, கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று ஒப்பந்தம் இருப்பதால், இந்திய ஒன்றிய அரசு பின்வாங்கிய தோடு, கோவா மாநிலத்துக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கியது. ஆனால், புதுச்சேரிக்கு வழங்காமல் காலம் கடத்தியது ஒன்றிய அரசு.

அதற்கு காரணம், நம்மூர் அரசியல் வாதிகளே. போதிய அக்கறையும் கவனமும் செலுத்த வில்லை. அப்போது வரும் நிதியே அளவுக்கு அதிகமாக இருந்தது. வரி வருவாயும் குறைவாக இருந்தது. உள்நாட்டு உற்பத்தியும் குறைவாக இருந்தது. இந்திய ஒன்றிய அரசு தரும் 90 சதவீத மானிய நிதியை வைத்து கொண்டு, வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தனர். இந்திய ஒன்றிய அரசும், புதுச்சேரியை தனது செல்ல பிள்ளை போல பார்த்துக் கொண்டது.

மாநிலத்தில் ஆளும் கட்சி தேசிய கட்சியாக இருந்தாலும், தமிழக கட்சிகளின் ஆளுமையும் புதுச்சேரியில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அவை தேசிய கட்சிகளுக்கு ஆதரவளித்ததால், மாநில அந்தஸ்து விஷயத்தில் போதிய அக்கறை காட்டவில்லை.

இந்த நேரத்தில், கோவா மாநிலம் சிறப்பு மாநில அந்தஸ்து எப்படி பெற்றது என்பதை சொல்லியாக வேண்டும். கோவா, டையு, டாமன் பகுதிகள், இப்போது எப்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹெ, ஏனாம், பகுதிகள் இருகிறதோ, அதே  மாதிரி அங்கும்  இருந்தது. இந்திய ஒன்றிய அரசு, கோவா, டையு, டாமன் பகுதிகளை, மகாராஷ்டிரா மாநிலத்தில் இணைக்க முயற்சி எடுத்தது.  இதை எதிர்த்து கோவா மக்கள் ஓரணியில் திரண்டு மாபெரும் போராட்டத்தை நடத்தினர். பிரெஞ்சு ஒப்பந்தத்தில் மக்கள் கருத்து கேட்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டினர்.

இதற்கு இந்திய ஒன்றிய அரசு, பணிந்து கோவா மறுசீரமைப்பு சட்டத்தை 1987 ல் கொண்டு வந்தது. இதில் கோவாவை தனி மாநிலம் ஆக்கி சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கியது. டையு மற்றும் டாமன் பகுதியை தனி யூனியன் பிரதேசமாக்கியது. பின்னாளில், ஹவேலி யை இத்துடன் இணைத்துக் கொண்டது.

இதே போன்று, புதுச்சேரி மறுசீரமைப்பு சட்டம் கொண்டு வந்து, ஏனாம், மாஹெ பகுதிகளை சந்திரநாகூரை மேற்கு வங்காளத்தில் சேர்த்தது போல, ஆந்திரா, கேரள மாநிலத்தில் சேர்த்து விட்டு, காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக்கி,  புதுச்சேரி மாநிலத்தை தனிமாநிலமாக்கி, சிறப்பு மாநில அந்தஸ்து வழங்குவதோடு,  23 தொகுதிகளை 25 தொகுதியாக மாற்ற வேண்டும். இதுவரை புதுச்சேரி மாநில வளர்ச்சியில் அக்கறை காட்டாத அரசு ஊழியர்கள் கூட, இப்போது மாநில அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவா மாநிலத்துக்கு எப்படி சிறப்பு மாநில அந்தஸ்து வழங்குவதற்கு, கோவா மறுசீரமைப்பு சட்டம் 1987 ல் கொண்டு வரப்பட்டதோ, அதே முறையில் புதுச்சேரிக்கும், மாநில அந்தஸ்து கிடைக்க வகை செய்யப் படவேண்டும். இதில் கீழ்கண்ட நிபந்தனைகளையும் விதிக்க வேண்டும்.

  1. சிறப்பு மாநில அந்தஸ்து.
  2. 11000 கோடி கடன் தள்ளுபடி.
  3. 20000 கோடி சிறப்பு பேக்கேஜ்.

ஆகிய கோரிக்கைகளை இந்திய ஒன்றிய அரசிடம் வைக்க வேண்டும். இப்படி செய்வார்களா நமது ஆட்சியாளர்கள் என்ற கேள்வி எழுகிறது. டெல்லி செல்லவே பயப்படும் இவர்கள், இது போன்ற துணிச்சல் நடவடிக்கைகளை எடுப்பார்களா என்பது சந்தேகமே.

இதற்கு, மக்கள் தான் ஓரணியில் திரள வேண்டும். மீண்டும் ஒரு இணைப்பு எதிர்ப்பு போராட்டம் போன்று, சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும். புதுச்சேரி மறுசீரமைப்பு சட்டம் கொண்டு வரவேண்டும். என்ற கோரிக்கைகளை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். அது எப்படி என்பதை, அரசியல் அமைப்பு சட்டப்படி பார்ப்போம்.

ஆளுநருக்கு உண்மையிலேயே அதிகாரம் இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு முன் யாரும் கேட்டதில்லை. வருபவரிடம் வளைந்து குனிந்து நெளிந்து சென்றதால், இதன் அவசியம் அப்போது தெரியவில்லை.

உண்மையிலேயே அரசியல் அமைப்பு சட்டம் 239 ன் படி, ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தை, குடியரசுத் தலைவர் ஆளுநருக்கு அளிக்கிறார். இதற்கு இந்த சட்டம் வகை செய்கிறது. ஆனால், சட்டம் 240 ல் குடியரசுத் தலைவருக்கு சட்டம் இயற்ற அதிகாரம் செலுத்த வகை செய்கிறது. இதன் அடிப்படையில் ஆளுநரை குடியரசுத் தலைவர் நியமிக்கும் போது, இந்த அதிகாரம் ஆளுநருக்கு கிடைக்கிறது.

  • ஆனால் 14 வது சட்ட திருத்தத்தில், 240 (1) சட்ட திருத்தம் செய்து, சட்ட மன்றம் கூடிய அமைச்சரவை குழு அமையும் பட்சத்தில், குடியரசுத் தலைவர் அந்த யூனியன் பிரதேசங்களை, அதிகாரம் செலுத்தும் அதிகாரம் அவருக்கு இல்லை.
  • யூனியன் பிரதேச சட்டம் 239 ஏ ல்,  புதுச்சேரியை சேர்த்த போது, 240 (1) சட்டப்படி  புதுச்சேரி யூனியன் பிரதேசமானது,  சட்ட மன்றம் மற்றும் அமைச்சரவை கூடிய குழு ஆகும்.
  • 240 (1) ன் படி குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தை இழக்கும் பட்சத்தில்.
  • 239 சட்டத்தின் படி குடியரசுத் தலைவர் நியமனம் செய்யும் ஆளுநரும் அவருடைய அதிகாரத்தை இழக்கிறார். இது தான் உண்மை.
  • ஆனால், 239 ல் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டுமென, மத்திய உள்துறை அடம் பிடிக்கிறது.
  • இதில் தான் மிகப்பெரிய அரசியல் அடங்கி இருக்கிறது. உண்மையான வழக்கறிஞர் இந்த வழக்கை எடுத்து வாதாடினால், புதுச்சேரி அரசுக்கு நிச்சயம் அதிகாரம் கிடைக்கும்.
  • இதற்கு எல்லாம் எதிர்த்து போராட பேராண்மை கொண்ட, பேராற்றல் படைத்த,  துணிச்சலான நேர்மையான அரசு தேவை. நமக்கு கிடைத்த ஆட்சியாளர்கள் அப்படி இல்லை.
  • விளம்பர விரும்பிகள், தங்களை கடவுளின் அவதாரமாக நினைத்து கொண்டு,  போதை வாழ்க்கை வாழ்பவர்கள்.
  • இதற்கு முடிவுரை எழுதப்போவது யார் தெரியுமா? மக்கள்தான்.  இந்த வாழ்க்கையை அவர்களுக்கு கொடுத்தவர்களளும் அதே மக்கள்தான்.
  • அந்த மக்களையே அவர்கள் அலட்சியப்படுத்தி, தங்களை அவதார புருஷர்களாக நினைத்து வலம் வரும் போது, துன்பப்பட்டு துயரப்பட்டு கிடக்கும் மக்கள், ஒரு கை பார்க்காமல் விட்டு விடுவார்களா என்ன.

எல்லாவற்றிலும் ஒரு நேர்மை வேண்டும், ஒரு உண்மை வேண்டும்.

புதுச்சேரி மாநில அந்தஸ்து தொடர்பாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளபடி, எனது தனிப்பட்ட கருத்தைப் பதிவு செய்கிறேன். மாநில அந்தஸ்து கோரிக்கை என்பது 58 ஆண்டு கால போராட்டம் என, புதுச்சேரி அரசியல் கட்சிகள் சொல்கின்றன. இதற்காக அவை சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டதை விட, என்ன சாதனை செய்து இருக்கின்றன. என்ற கேள்வி அனவரது மனதிலும் எழுகிறது.

தீர்மானம் நிறைவேற்றி, அதை தொடர்ந்து அதற்காக இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி, மக்களை திரட்டி போராட்டம் நடத்தி, மாநில அந்தஸ்து பெற்று தந்து இருந்தால், அவர்களுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தலாம்.

இன்னும் நிலாவில் ஆயா வடை சுட்ட கதையாக. இந்த அரசுக்கு, ஒன்றிய  அரசு செய்யும் என்ற நம்பிக்கை வேறு இருக்கிறது. இந்திய அரசு நிச்சயம் செய்யும் எண்ணம் உள்ளது. போன்ற வார்த்தைகள், வெறும் காலதாமதம் செய்யும் மாய ஜால வார்த்தைகளே.

சரி, புதுச்சேரி மாநில அந்தஸ்து பெற மூன்று வழிகள் உள்ளன.

  1. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், 14 வது சட்டத்திருத்தம் செய்யும் போது. யூனியன் பிரதேசங்கள் சட்டம், அமல் படுத்த பட்டது. அப்படி யூனியன் பிரதேசங்களில், திரிபுரா, இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், கோவா புதுச்சேரி ஆகியன அடங்கும். புதுச்சேரி தவிர மற்ற அனைத்து யூனியன் பிரதேசங்களும் மாநில அந்தஸ்து பெற்று விட்டன. மேற்கண்ட யூனியன் பிரதேசங்கள் எப்படி மாநில தகுதி பெற்றனவோ, அதே வழிமுறையை பின்பற்றி புதுச்சேரி க்கும், மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.
  2. கோவா, டையு, டாமன் ஆகிய பகுதிகளுக்கு மாநில அந்தஸ்து வழங்க, இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்த போது, கோவா மறுசீரமைப்பு சட்டம் மூலம், 1987-ல், கோவா மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து வழங்கியும், டையு டாமன் பகுதிக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கியது. அதே முறையை பின்பற்றி, புதுச்சேரி மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ், புதுச்சேரி, காரைக்காலை, உள்ளடக்கி தனி மாநில அந்தஸ்து வழங்கி, மாஹெ மற்றும் ஏனாம்  பகுதிகளுக்கு, யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கலாம்.
  3. மாஹே ஏனாம் பகுதிகளை, ஏற்கனவே சந்திர நாகூர் பகுதியை மேற்கு வங்காளத்தில் இணைத்தது போல், கேரளா, ஆந்திர மாநிலங்களில் இணைத்து விட்டு, புதுச்சேரி மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து வழங்குவதோடு, 23 சட்டமன்றத் தொகுதிகளை 25 தொகுதியாக அதிகரிக்க வேண்டும். காரைக்கால் பகுதியை தனி யூனியன் பிரதேசமாக்க வேண்டும்.

இந்த மூன்று வழிகளில் ஏதாவது ஒன்றை இந்திய ஒன்றிய அரசு செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி மறுசீரமைப்பு சட்டம் கொண்டு வந்து, இதனை அமல் படுத்த வேண்டும்.

காலம் காலமாக இந்திய ஒன்றிய அரசின் காலணியாதிக்கத்துக்கு உட்பட்டு எவ்வளவு ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடப்பது?

இந்திய ஒன்றியம், உள்துறையின் கீழ் செயல்படுவதால், அந்த துறையின் அதிகாரிகளின் வேடாடைக்காடாக மாறி, தங்கள் அடையாளங்களை இழந்து, வாழ்வாதாரம் இழந்து, நிலம் இழந்து,  வளங்கள் இழந்து, இந்திய ஒன்றிய அரசை எதிர்பார்த்து கையேந்தி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகார சுகம் கண்ட ஆட்சியாளர்களின் செயல்பாட்டால், மாநிலம் சிக்கி சீரழிந்து போய் உள்ளது. இந்திய ஒன்றிய அரசானது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல், இந்தியாவில் உள்ள அனைத்து யூனியன் பிரதேசங்களும் இதே கோரிக்கையை முன்வைத்து ஒன்று பட்டால், இந்த பிரச்னைகளுக்கு நிரந்தர முடிவு வரும்.

லடாக்கில் இரண்டு வருடம் தான் ஆகிறது. மாநில அந்தஸ்து கோரிக்கை வைத்து மக்கள் அமைப்புகள், வலுவான போராட்டங்களில் இறங்கி உள்ளன. இதற்கே அவர்களுக்கு இந்திய ஒன்றிய உள்துறை, 2020 ல் ரூ 5958 கோடியும், 2021 ல் 5958 கோடியும் வழங்கி உள்ளது, அங்கே மக்கள் தொகை வெறும் 3.40 லட்சம் மட்டுமே.

ஆனால் நமது புதுச்சேரிக்கு 2020 ல் 1703 கோடியும், 2021 ல் 1729 கோடியும் வழங்கியது. மக்கள் தொகை 15 லட்சம். ஏன் இந்த பாரபட்சம்? என்ற கேள்வியை எந்த அரசியல் கட்சிகளும் பேராற்றலோடு, பேராண்மையோடு,  இந்திய ஒன்றிய அரசை எதிர்த்து உரிமை குரல் எழுப்ப தயாரில்லை.

மக்கள் தான் இதற்கு ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும். இந்திய ஒன்றிய அரசே! கோவா மறுசீரமைப்பு சட்டம் மூலம். கோவா மாநிலத்துக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கியது போல். புதுச்சேரி மாநிலத்துக்கு வழங்கிடுக.

இனியும் காலம் கடத்தாதே. அனைத்து கட்சிகளும், அனைத்து அமைப்புகளும். வியாபாரிகளும், தொழிலாளர்களும், விவசாயிகளும், மீனவர்களும், இளைஞர்களும், பெண்களும்,  ஒன்று திரண்டு உரிமை குரலைஉரக்க எழுப்பி வீதியில் இறங்கினால் ஒழிய.

புதுச்சேரி வளர்ச்சி என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான்.

தொகுப்பு: 

திரு. கோ. ராமலிங்கம்.

செயற்குழு உறுப்பினர்.

ஆம் ஆத்மி கட்சி.

புதுச்சேரி.

பதிவு.

திரு. M M Y. ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »