மாண்புமிகு புதுச்சேரி மக்கள் முதல்வர் அவர்களுக்கு, நேரடியாக சில கேள்விகள்.
புதுச்சேரி மக்களாகிய நாங்கள், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், உங்களின் வாக்குறுதிகளுக்காகவோ, நீங்கள் ஓட்டுக்கு பணம் அளித்ததற்காகவோ, ஓட்டுப் போடவில்லை.
கடந்த ஆட்சியில் நீங்கள் கடைப்பிடித்த மவுனம் வெறுப்பு ஏற்படுத்தினாலும், கடந்த மக்கள் விரோத காங்கிரஸ் ஆட்சியில், மக்கள் பட்ட துன்பங்கள் துயரங்கள் சொல்லி. மாளாது.
எனவே தான் மக்களும், நீங்கள் மத்திய ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்ததால், உங்களை வெற்றி பெற வைத்தனர்.
ஆனால் நடப்பது என்ன?
அனைத்துமே ஆமை வேகத்தில் நடந்தால் எப்படி?
தமிழகம் முயல், வேகத்தில் செல்லும் போது, நீங்கள் மட்டும் ஏன் ஆமை வேகத்தில் செல்கிறீர்கள் ?
அரசு துறையில் 32 துறைகளில் 16 துறைகளை நீங்களே வைத்து இருக்கிறீர்கள், இப்படி இருக்கும்போது, நீங்கள் புலி வேகத்தில் அல்லவா செல்லவேண்டும்?.
உங்கள் கூட்டணியினருக்கு ஐந்து துறைகள் கூட சரியாக ஒதுக்க வில்லை.
சரி, அது உங்கள் கூட்டணி விவகாரம், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்காமல் அது உங்களுக்குள் ஒரு மறைமுக யுத்தம் நடப்பதாக மக்கள் சந்தேகப் படுகின்றனர்.
தாங்கள் சட்டசபையில், பொது வெளியில் அறிவிப்பு வெளிடுகிறீர்கள்.
அது தலைப்பு செய்தியாகி இரண்டு நாட்களுக்கு மக்கள் விழாவாக கொண்டாடுகின்றனர்.
உதாரணமாக, வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ 10000 சம்பளம் வழங்கப்படும், என்ற செய்தியால், அவர்கள் உற்சாக மிகுதியில் தங்கள் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
உங்கள் அறிவிப்புகளை ஏன் அதிகாரிகள் மதிப்பதில்லை?
உங்களை விட அவர்களுக்கு அவ்வளவு அதிகாரமா?
இல்லை பணம் இல்லாமல் அறிவிப்பு மட்டும் செய்கிறீர்களா?
தீபாவளிக்கு அறிவித்த இலவசமே, இப்போது தான் ஆரம்பிக்க பட்டு இருக்கிறது. அந்த பணி எப்போது முடிவடையும் என்றும் தெரியவில்லை.
நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு, 45 மாதம் சம்பளம் இல்லை.
மழைக்கால நிவாரணம் ரூ 5000 அறிவிப்பும் அப்படியே இருக்கிறது.
எதிர்க்கட்சிகளும் மவுன விரதம் காக்கின்றன.
ஊடகங்களும் எந்த குறைகளையும் சுட்டிக் காட்டுவதில்லை. கண்டுகொள்வதில்லை.
இந்த பட்ஜெட்டில், மத்திய அரசு அளித்த தொகை 20 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
அடுத்து கூட்டணி ஆட்சி:
மத்தியில் உங்கள் கூட்டணி ஆட்சி நடத்துகிறது.
புதுச்சேரி தொடர்பான நிதி நிலை குறித்தும், அதிகாரிகள் செயல்பாடுகள் குறித்தும், நேரில் பிரதமரிடமோ, உள்துறை அமைச்சரிடமோ புகார் செய்ய தயங்குவது ஏன்?
நிதியமைச்சரிடம் நிதிப் பற்றாக்குறை பற்றி தெரிவிக்க தயங்குவது ஏன்?
பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், நிதியமைச்சர், ஆகியோர் தேர்தல் பிரசார கூட்டத்தில் நீங்களும் தானே அமர்ந்து இருந்தீர்கள்.
புதுச்சேரி மக்களுக்காகவும், மாநில நலனுக்காகவும், உடனடியாக டில்லி சென்று, மாநில தகுதி பெற நடவடிக்கை எடுக்கவும். நிதிப்பற்றாக்குறையை போக்கவும், போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுவே உங்களுக்கு ஓட்டு போட்ட மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது….
இப்படிக்கு
ஏதாவது நல்லது நடக்காதா என ஏங்கி தவிக்கும் புதுவை மக்கள்