ஐயா, வணக்கம்,
நாடு சுதந்திரம் பெற்று 25-01-1950 முதல் தேர்தல் துறையாகிய நீங்கள் இயங்கி வருகிறீர்கள். நாட்டில் நடக்கும் பாராளுமன்ற, சட்டமன்ற மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களுக்காக ஓடி ஓடி உழைக்கிரீர்கள். குறிப்பாக பணப்பட்டுவாடா நடக்காமல் இருக்க கண்ணில் விளகெண்ணை ஊற்றி கவனிக்கிறீர்கள். சந்தேகப்படும் ஒவ்வொரு நபரையும், ஒவ்வொரு வாகனத்தையும் தணிக்கை செய்து, பொது மக்களுக்கு எவ்வளவு இடையூறு மற்றும் தொந்தரவு செய்ய முடியுமோ செய்கிறீர்கள். உங்களுடைய வேலை பளுவை கண்டு வியப்பாக இருக்கிறது. இந்தியாவில், இவ்வளவு பொறுப்புடன் செயல்படும் வேறு ஒரு துறை இருக்கவே முடியாது என்று மக்கள் நம்பும்படி இருக்கிறது உங்களின் உழைப்பு.
ஆனால், இதுவரை இந்தியாவில் நடந்து முடிந்த ஒரு தேர்தலிலாவது பணப்பட்டுவாடா செய்யபடுவதை உங்களால் தடுக்க முடிந்ததா? அல்லது இனியாவது முயுமா? பணம் கொடுத்து ஒட்டு வாங்கும் ஒரு அரசியல்வாதியின் திறமைக்கு நிகரான ஒரு தேர்தல் அதிகாரிகூட உங்களிடம் இல்லையா?
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை உண்மையிலேயே நீங்கள் தடுக்க நினைகிறீர்களா? அல்லது தடுப்பது போல நடிக்கிரீர்களா?
ஓட்டுக்கு பணம் கொடுக்க நினைக்கும் ஒரு அரசியல்வாதி எவனாவது, தன் சொந்த காரில் பணத்தை கொண்டு வருவானா? அவன் என்ன நீங்கள் நினைப்பது போல அவ்வளவு முட்டாளா? ஒரு தொகுதி மக்கள் முழுவதையும் முட்டாளாக்கும் திறமையுள்ள ஒருவனால் உங்களை முட்டாளாக்க முடியாதா? அல்லது நீங்கள் முட்டாலாகியதே இல்லையா?
இந்த கேள்வியெல்லாம் படித்து தேர்தல் துறையாகிய உங்களுக்கு உண்மையில் கோபம் வந்தால், எங்கே பார்ப்போம், உங்கள் திறமையை நிரூபித்து , நீங்கள் முட்டாள்கள் இல்லையென்று காட்டுங்கள் இப்போது நடக்கவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலில்.