சென்னையை சேர்ந்த சூரியப்பிரகாசம், தமிழகம் முழுவதும் போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குனர் சுதாதேவி பதில் மனுத் தாக்கல் செய்தார். அதில், “தமிழகத்தில் தற்போது 862 நேரடி கொள்முதல் மையங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் 12.25 லட்சம் மெட்ரிக் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மூடைக்கும் முப்பது நாற்பது ரூபாய் ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்கள்  என்பது தவறான தகவல். குறுவை சாகுபடி நெல் கொள்முதலுக்காக செப்டம்பர் 30ஆம் தேதி வரை 6 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு , 1,725 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்ட 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு நீதிபதிகள்,” லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல இடங்களில் சோதனை செய்து, பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டால் தான் இது போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும். அனைத்து அதிகாரிகளையும் குறிப்பிட்டு நீதிமன்றம் இந்த கருத்தை பதிவு செய்யவில்லை. லஞ்சம் பெற்று ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கே இது பொருந்தும். 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பதில்மனுவில் குறிப்பிடும்போது கொள்முதல் செய்யப்படும் நெல் மூடைக்கு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்கள் என்பது முற்றிலும் தவறான தகவல் எனக்கூறுவது எப்படி? இது நீதிமன்றத்திற்கு தவறான தகவலை அளிப்பதாகாதா? எனக் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, 105 பேர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதா? வழக்கு பதியப்பட்டதா? எவ்வளவு தொகை பறிமுதல் செய்யப்பட்டது? என்பது குறித்து விரிவான பதில்மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், விவசாயத்துறையின் செயலரை வழக்கில் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்தனர். விவசாயிகள் இரவு, பகலாக உயிரைக்கொடுத்து உழைத்து விளைவிக்கும் நெல்லுக்கு உரிய மதிப்பளிக்கப்படுவதில்லை. அது ஊதியம் வாங்கும் அரசு அதிகாரிகளின் ஊதியத்தை அவர்களின் கண்முன்னே கிழித்துப்போடுவதைப் போன்றது. விவசாயம் செய்ய தற்போது யாரும் முன்வருவதில்லை. நமது நாட்டில் விவசாயம் அனாதை ஆக்கப்பட்டு வருகிறது. விவசாயப் பொருட்களுக்கு விலை கூடுகையில் மட்டும் அதை யாரும் ஏற்பதில்லை. விவசாயத்திற்காகும் செலவீனங்களை யாரும் கருத்தில் கொள்வதில்லை எனவும் கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, லஞ்சம் வாங்குவது சாதாரண விசயமாகவும், லஞ்சம் வாங்காதவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என பார்க்கும் நிலை உள்ளது. தமிழகத்தில் ஊழல் என்பது புற்றுநோய்போல வளர்ந்து வருகிறது. போதிய அறுவை சிகிச்சை செய்யப்படாததால், அது அடுத்தடுத்த கட்டத்தை எட்டுகிறது என குறிப்பிட்டனர்.

மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு, லஞ்சமில்லா நிர்வாகத்தை உறுதி செய்வது தொடர்பாக அறிக்கை அளித்தது. அதன் பரிந்துரைகளில் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ஒவ்வொரு நிலையிலும் சொத்து விபரம், பொறுப்பு விபரத்தை நிர்ணயம் செய்யக் கூறியது. அதனை அனைத்து துறை செயலர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதனடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அரசுத்தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Source: https://www.puthiyathalaimurai.com/newsview/126217/Tenkasi-Bathing-in-Courtallam-Falls-Tourists-happy.html

தொகுப்பு:

புதிய தலைமுறை

பதிவு.

திரு. எம்.எம்.ஒய். ஹமீது.

மாவட்ட தலைவர்.

ஆம் ஆத்மி கட்சி.

காரைக்கால்.

 

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »