புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அளித்த பேட்டியில் பிரதமர் மோடியை தோற்கடிப்பது தனது வாழ்நாள் திட்டமில்லை என்றும், எங்கு ஆட்சிக்கு வந்தாலும் நாட்டை முன்னேற்றுவதே ஒரே நோக்கம் என கூறினார்.
மேலும் அவர் தனது பேட்டியில் கூறியதாவது: பஞ்சாபில் நிச்சயமாக ஆம் ஆத்மி சொந்த எதிர்பார்ப்பையும் தாண்டி வெற்றி பெற்றது. “காங்கிரஸ் மற்றும் அகாலி தளத்தால் மக்கள் சோர்ந்து போயிருந்தனர். டில்லியில் நடந்துள்ள நேர்மறையான மாற்றங்களை மக்கள் கேள்விப்பட்டு பஞ்சாபிலும் அதையே விரும்பினர். குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களும் ஆம் ஆத்மிக்கு நம்பிக்கை அளிக்கின்றன.
பா.ஜ.,வை எப்படி தோற்கடிப்பது என்பது எனது நோக்கமாக இருந்ததில்லை. பல கட்சிகள் அப்படி நினைக்கும். மோடியை வீழ்த்துவது என் வாழ்நாள் திட்டமில்லை. இந்த நாடு உலகின் நம்பர் 1 ஆக இருப்பதைப் பார்ப்பதே எனது நோக்கம். எங்கள் நேர்மறையான திட்டத்தை மக்கள் விரும்புகின்றனர். டில்லியை ஐந்து ஆண்டுகளில் சரிசெய்ய முடியும் போது நாட்டையும் சரிசெய்ய முடியும். எங்களின் மாற்றத்துக்கான திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முடிந்தால் அவர்கள் எங்களுக்கு ஆட்சியை தருவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=3002020