டில்லியில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள ஆம் ஆத்மி கட்சியை பல்வேறு மாநிலங்களிலும் வேரூன்ற செய்ய, அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார்.
பா.ஜ., – காங்கிரசுக்கு மாற்றாக பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, குஜராத், உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்களில் கணிசமான இடங்களில் வெற்றி பெறும் முயற்சியில் அக்கட்சியினர் இப்போதே களமிறங்கி உள்ளனர். டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு மட்டும் ஆட்சி பொறுப்பில் உள்ள ஆம் ஆத்மியை மற்ற மாநிலங்களிலும் வளர்த்தெடுக்க அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டு உள்ளார்.
இதற்கு விரைவில் நடக்கவுள்ள பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, குஜராத், உ.பி., சட்டசபை தேர்தல்களை வாய்ப்பாக பயன்படுத்த அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருமுனை போட்டி
இந்த ஐந்து மாநிலங்களில் உ.பி.,யை தவிர மற்ற நாலு இடங்களிலும் பா.ஜ., – காங்., இடையே இருமுனை போட்டி உள்ளது. இந்த ஐந்து மாநிலங்களிலும் பா.ஜ., – காங்., ஆகியவற்றின் செல்வாக்கு சற்று சரிய துவங்கி உள்ளதாக, அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இதை பயன்படுத்தி அங்கு தங்கள் செல்வாக்கை வளர்க்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது.
தேசிய மதிப்பு
கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது உ.பி.,யில் ஏற்பட்ட நிர்வாக குறைபாடுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த ஆம் ஆத்மி திட்டமிட்டு உள்ளது. கல்வி, சுகாதாரத்தில் புதிய திட்டங்கள், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களில் மானியம் அளிப்பது போன்ற புதிய திட்டங்களுடன், உ.பி.,யில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட ஆம் ஆத்மி முடிவு செய்துஉள்ளது. இதற்காக தான் ஆம் ஆத்மியின் ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் அடிக்கடி உ.பி.,க்கு வந்து செல்கிறார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, ‘திரங்க சங்கல்ப யாத்திரை’ என்ற பேரணியை ஆம் ஆத்மி நடத்தி வருகிறது. அயோத்தியில் உள்ள ராமர் கோவில் மற்றும் ஹனுமன்காரி ஆகிய இடங்களில் இந்த யாத்திரையை நிறுத்தி ஹிந்துக்களை கவர கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார். இதன் வாயிலாக ஆம் ஆத்மிக்கு ஒரு தேசிய மதிப்பு உருவாகும் என அவர் எதிர்பார்க்கிறார்.
வெற்றி உறுதி
டில்லியை போல சிறிய மாநிலமாக உத்தரகண்ட் இருப்பதால் இங்கு சரியாக திட்டமிட்டு பணியாற்றினால் வெற்றி உறுதி என கெஜ்ரிவால் உறுதியாக நம்புகிறார். டில்லியில் பயன்படுத்திய தேர்தல் வியூகங்களை உத்தரகண்டில் பின்பற்ற அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அஜய் கோத்தியால் என்பவரை தங்கள் முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவித்து உள்ளது.உத்தரகண்டின் சார்தாம் கோவில்களின் நிர்வாகத்தை மாநில அரசு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ளதற்கு பூசாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை ஆம் ஆத்மி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வியூகம் வகுத்து உள்ளது.’தேர்தலில் வென் றால், உத்தரகண்டை சர்வதேச ஆன்மிக தலைநகராக அறிவிப்பேன்’ என, கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
அதிக வாய்ப்பு
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில், ஆம் ஆத்மி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள மாநிலமாக பஞ்சாப் உள்ளது.காங்.,கை சேர்ந்த முதல்வர் அமரீந்தர் சிங் – சித்து மோதல், அகாலிதளம் – பா.ஜ., கூட்டணியில் பிளவு ஆகியவை ஆம் ஆத்மிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி உள்ளன.கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து வரும் விவசாயிகள் போராட்டமும் ஆம் ஆத்மியின் வெற்றிக்கு வழி வகுக்கும் என நம்பப்படுகிறது. கடந்த 2017 சட்டசபை தேர்தலின் போதே, காங்.,குக்கு பலத்த போட்டியாக ஆம் ஆத்மி இருந்தது.
புதிய நம்பிக்கை
கடந்த 1998 முதல் ஒரு சட்டசபை தேர்தலில் கூட தோல்வி அடையாத பா.ஜ.,வின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில், ஆம் ஆத்மி களம் இறங்குவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா பெருந்தொற்றின் போது பா.ஜ., அரசு திறம்பட செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஜாதி ரீதியான சில சிக்கல்களும் உள்ளன. தேர்தலுக்கு முன், மக்கள் மத்தியிலுள்ள அதிருப்தியை சரி செய்யவே, முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானியை பா.ஜ., தலைமை விலக்கியதாக கூறப்படுகிறது.சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றாலும், ஆம் ஆத்மிக்கு கணிசமான இடங்கள் கிடைத்துள்ளது அக்கட்சிக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
வேலைக்கு தட்டுப்பாடு
கோவாவில் கடும் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுகிறது. நாடு தழுவிய அளவில் வேலைக்கு தட்டுப்பாடு உள்ள மாநிலங்களில் கோவா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள ஆம் ஆத்மி, பா.ஜ., முதல்வர் பிரமோத் சாவந்த்தை கடுமையாக விமர்சித்து வருகிறது.மேலும் அவர் வாக்குறுதி அளித்ததை போல இலவச குடிநீர் வழங்கவும் பா.ஜ., அரசு தவறிவிட்டதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டி வருகிறது.’குஜராத்தை போலவே, கோவாவிலும் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வர, ஆம் ஆத்மி மறைமுகமாக உதவும்’ என, அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
கெஜ்ரிவால் ஆவேசம்
ஆம் ஆத்மி தேசிய செயலர் பங்கஜ் குப்தாவுக்கு பணப் பரிமாற்ற மோசடி வழக்கின் கீழ், அமலாக்கத்துறை ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.இது குறித்து டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:மத்திய விசாரணை அமைப்புகளை ஏவிவிட்டு எங்களை ஒடுக்க பா.ஜ., அரசு முயற்சிக்கிறது. நாங்கள் மென்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறோம்.
டில்லியில் வருமான வரித் துறை, சி.பி.ஐ., போலீஸ் ஆகியவற்றை ஏவி, எங்களை ஒழிக்க நினைத்தனர். நாங்கள் 62 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தோம்.இப்போது பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், குஜராத்தில் வேகமாக வளர்ந்து வருகிறோம். அதற்கு பலனாக தான் அமலாக்கத்துறை ‘நோட்டீஸ்’ வந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருப
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2843781