டிரான்ஸ்போர்டர்ஸ் அலட்சியத்தால், பயனற்றுபோன பல லட்சம் மதிப்புள்ள கார்: தக்கபாடம் புகட்டிய நீதிமன்றம்!

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை அலட்சியமாகக் கையாண்டு, உபயோகிக்க துளியும் லாயக்கற்றதாக மாற்றிய, தனியார் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் நிறுவனத்துக்கு, பாடம் புகட்டும் விதமாக நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியுள்ளது.

அசாம் மாநிலம், மார்கரிட்டா பகுதியைச் சேர்ந்தவர் சிமந்தா தத்தா, 31 வயதுடையவர். இவர் பெங்களூருவில் இயங்கி வரும் ஐடி கம்பெனியில் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு தான் கடந்த 2015ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் தற்போது வெற்றி கிடைத்துள்ளது.

சிமந்த தத்தாவுக்கு கடந்த 2015ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள, ஐடி கம்பெனியில் வேலைக் கிடைத்தது. இதன்காரணாக, அவர் சொந்த ஊரான அசாமில் இருந்து பெங்களூருவுக்கு குடிபெயர திட்டமிட்டார். இதைத்தொடர்ந்து, அவரது 2013ம் ஆண்டு மாடல் ஹூண்டாய் எலன்ட்ராவையும், பெங்களூருக்கு கொண்டுச் செல்ல அவர் விரும்பியுள்ளார்.

இதற்காக அகர்வால், பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் என்னும் தனியார் கம்பெனியை நாடியுள்ளார் சிமந்தா தத்தா. அவர்களிடம் தனது புத்தம் புதிய எலன்ட்ராவை பெங்களூருவுக்குக் கொண்டுவர முறையிட்டுள்ளார். இதற்காக 43 ஆயிரத்து 670 ரூபாயை போக்குவரத்துக் கட்டணமாக அவர் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், தனது கார் புத்தம் புதிய கார் என்றும், அதனைப் பாதுகாப்பாகக் கொண்டுவரும்படியும் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி, காரைப் பெற்ற அந்த நிறுவனம் 26 தேதிக்குள் காரை பெங்களூருவில் ஒப்படைத்துவிடுவதாக உறுதியளித்தது. ஆனால், காரை உரிய நேரத்தில் அந்த நிறுவனம் ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து சிமந்தா தத்தா, கேட்கும்போதெல்லாம் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி மழுப்பல் செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, நீண்டநாள் இழுபறிக்கு பின்னர், எலன்ட்ரா காரை 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதியன்று பேக்கர்ஸ் நிறுவனம் சிமந்தாவிடம் ஒப்படைத்துள்ளது. காரைப் பெற்ற அவர், மறுநாள் அலுவலகம் எடுத்துள்ளார். ஆனால், கார் துளியளவும் இசைவின்றி காணப்பட்டுள்ளது.

இதையடுத்து, காரை சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் சென்ற சிமந்தாவுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால், கார் இனி பயன்படுத்துவதற்கு லாயக்கற்றது என சர்வீஸ் சென்டர் டெக்னீசியன்கள் தெரிவித்துள்ளனர். கார் முழுமையாக தண்ணீரில் மூழ்கி படுமோசமாக பாதிப்படைந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அகர்வால் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸிடம் சிமந்தாக கேட்டபோது, அதற்கான தகவல் எதுவும் தெரிவிக்காமல் அலட்சியம் காட்டியுள்ளனர்.

தனது புத்தம் புதிய கார் இவ்வாறு செயலற்று போய்விட்டதே என்று மன உலைச்சலுக்கு ஆளான சிமந்தா, தனியார் பேக்கர்ஸ் நிறுவனத்தின்மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கடந்த 2015ம் ஆண்டு தொடரப்பட்ட இவ்வழக்கின்மீதான தீர்ப்பை அந்த நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, வாடிக்கையாளரின் காரை சேதப்படுத்தி மன உளைச்சலுக்கு அடைய வைத்தற்காகவும், அலை கழிப்பு செய்த குற்றத்திற்காகவும், டிரான்ஸ்போர்ட் கட்டணம் உட்பட ரூ. 80 ஆயிரத்தை அவருக்கு அபராதத் தொகையாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், காரை சேதப்படுத்திய குற்றத்துக்காக காரினை மாற்றித் தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது ஹூண்டாய் எலன்ட்ரா காரின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டிருப்பதால், இந்த காரின் மதிப்பைக் காட்டிலும் சற்று குறைவான ரூ. 13 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான தொகையில் காரை அவருக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சிமந்தா தத்தா கூறியதாவது, “காரை நீண்ட நாள் கழித்து ஒப்படைத்தது மட்டுமின்றி, பயன்படுத்துவதற்கு துளியளவும் லாயக்கில்லமால் செய்துவிட்டனர். நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது அவர்களுக்கு ஓர் தக்க பாடத்தை அளிக்கும். இனியாவது வாடிக்கையாளர்களின் கார்களைப் பொறுப்பாக பாதுகாத்து ஒப்படைப்பார்கள் என நினைக்கிறேன்” என்றார்.

Source: tamil.drivespark. more info at http://bit.ly/2FvUQXu

தொகுப்பு & பதிவு:
AIARA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »